அஜீத் படத்தை தயாரிக்கிறாரா அமிதாப் பச்சன்?



‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தையடுத்து தனது 57வது படம் நடிப்பதற்கு முன் காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் அஜீத். கடந்த 3 மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்தார். அவர் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் பொறுப்பை ‘வேதாளம்’ இயக்குனர் சிவா  மீண்டும் ஏற்றிருக்கிறார். 

கடந்த ஜூன் மாதம் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அஜீத்துக்கு ஷூட்டிங்கில் ஈடுபட, கூடுதல் காலஅவகாசம் தேவைப்பட்டதால் ஆகஸ்ட் மாதத்துக்கு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் முடித்துவிட்டு, அஜீத் நடிக்கும் 58வது படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

15 வருடத்துக்கு முன் அமிதாப்பச்சன் பட நிறுவனம் தமிழில் முதன்முதலாக பட தயாரிப்பில் ஈடுபட்டபோது அஜீத் நடித்த ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தது. அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தமிழ் படம் தயாரிக்காமல் அமிதாப் ஒதுங்கிக்கொண்டார். தற்போது அஜீத்துக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. 

அவர் படத்தை தயாரித்தால் கண்டிப்பாக லாபம் பார்க்கலாம் என்றும் இதையடுத்து அஜீத்தின் அடுத்த படத்தை அமிதாப் தயாரிக்க உள்ளார் என்றும் செய்தி பரவியது. ஆனால் இதை அமிதாப் மறுத்திருக்கிறார். டுவிட்டர் பக்கத்தில் அமிதாப்பிடம் ஒரு ரசிகர், ‘அஜீத் படம் தயாரிக்கிறீர்களா?’ என்றதற்கு ‘இல்லை’ என அவர் பதில் அளித்துள்ளார்.

0 comments: